பீகாரில் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் புனித மாதமான ஸ்ராவணத்தின் மங்களகரமான திங்கட்கிழமையாக இந்துக்கள் கருதும் நாளில், லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோவிலுக்கு சிவபெருமானுக்கு நீர் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது .
சம்பவ இடத்தில் மின் கம்பம் ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பீதி கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று மூத்த காவல்துறை அதிகாரியான சிவம் குமார் கூறினார்.
எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னரே சரியான காரணத்தை எங்களால் கூற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
கூட்ட நெரிசல் காரணமாக தடுப்பு உடைந்ததாகவும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் தெரிவித்தார்.
குறைந்தது 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

Post a Comment